×

டோல்கேட் அவசரகால வழி வசூல் மையத்தை அகற்ற வேண்டும்

 

கோவை, மே 8: தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கணியூர் அருகே சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் இயங்கி வருகிறது. இந்த டோல்கேட்டில் உள்ள அவசரகால வழியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், டோல்கேட் நிர்வாகத்தினர் பணம் வசூலிக்க துவங்கினர். இதற்கு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வசூல் மையம் கைவிடப்பட்டது. அவசர கால வழியாக மட்டும் இயங்கியது. ஆம்புலன்ஸ், காவல்துறை வாகனம், அரசுத்துறை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனம், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் வாகனம் இவ்வழியாக சென்று வந்தது.

இந்நிலையில், கடந்த மே 1ம் தேதி முதல் இந்த அவசர கால வழி, மீண்டும் வசூல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், அரசுத்துறை வாகனங்கள் அவசரமாக இந்த வழியாக கடந்துசெல்ல முடியவில்லை. எனவே, இந்த வசூல் மையத்தை ரத்து செய்துவிட்டு, எப்போதும்போல் அவசர கால வழியாக மட்டும் இயக்க வேண்டும். இந்த அவசர கால வழியில், உள்ளூர்வாசிகள் வாகனம், முக்கிய பிரமுகர்கள் வாகனம் செல்லவும் அனுமதிக்க வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post டோல்கேட் அவசரகால வழி வசூல் மையத்தை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu Farmers' Association ,President ,S. Palaniswami ,District ,Collector ,Krantikumar Badi ,Salem-Kochi National Highway ,Karumathambatti Kanyur ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED நிலுவை தொகை வழங்க கோரிக்கை